முன் பக்கம் கவிதைகள் கட்டுரை சினிமா புத்தகங்கள் சிறுகதைகள் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம் பங்குச் சந்தை
*கொழும்பு: தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

Friday, August 7, 2009

சுய நிர்ணய உரிமையுடன் கூடிய ஆட்சி மட்டுமே தீர்வாக அமைய முடியும்

கொழும்பு: தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவந்த பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஆட்சியே இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும். இது எங்களால் பெற முடியாதது அல்ல. பெற முடியாது என்று கருதுபவர்கள் ஒதுங்கி விடுங்கள் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திரிகோணமலை எம்.பியுமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

தனித்துவமான வகையில் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் மக்களுக்கு சகல அதிகாரங்களுடனுமான முழுமையான சுயாட்சி வழங்கப்பட வேண்டும்.

நிலம், பாதுகாப்பு, விவசாயம், கல்வி, கைத்தொழில்கள் அனைத்தும் உள்ளடங்கிய ஆட்சி எமது மக்களின் கைகளில் இருக்க வேண்டும். இவற்றை நிர்வகிப்பதற்கான நிதியை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் திரட்டுவதற்கு அனுமதி இருக்க வேண்டும்.

இனப்பிரச்சினைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன் வைக்கின்ற தீர்வுத் திட்டம் இதுவே ஆகும்.

ஏற்கனவே, இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பின்போது இந்தியாவுடன் இணைந்தே இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று நாம் வலியுறுத்தியுள்ளோம். இந்தியா அதற்கு சம்மதித்துள்ளது.

13
வது திருத்தம் தீர்வல்ல..

எமது இனப்பிரச்சினைக்கு 13 ஆவது அரசியல் திருத்தம் தீர்வாக அமையாது. 1997 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களின்போது தங்களைத் தாங்களே ஆள்கின்ற சுயநிர்ணய உரிமைக்காகவே கூட்டமைப்புக்கும் அதனோடு இணைந்த கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் வாக்களித்தனர். இது தொடர்பாக அரசுடனும் அனைத்துலகத்துடனும் பேசுவதற்கு கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது.

அனைத்துலக அழுத்தத்தின் காரணமாக அனைத்துக் கட்சி மாநாட்டை கூட்டிய அதிபர், 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக பேச்சை தொடங்கலாம் என்று கூறியதாகவும் இதனால் ஜே.வி.பி. வெளியேறியதாகவும் ஏனைய தரப்புக்களும் அதிபரை ரகசியமாகச் சந்தித்து எச்சரித்தன. இதையடுத்து 13 ஆவது திருத்தச் சட்டம் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டது.

தமிழ் மக்கள் யாருக்கும் அடிமைகள் அல்ல. அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. தேர்தல்கள் வரலாம், போகலாம். ஆனால், நாங்கள் எமது அடிப்படைக் கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது. எமது எதிர்காலச் சந்ததி சுதந்திரமாகவும் கௌரவமாகவும் வாழ வேண்டும் என்பதே எமது நோக்கம்.

தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகின்ற அமைச்சர்கள் மக்களுக்குச் சில உதவிகள் வழங்குகின்றனர். குறிப்பாக நாங்கள் வந்த விமானத்தில் கூட சில கம்ப்யூட்டர்களைக் கொண்டுவந்த அமைச்சர்கள் அதனை யாழ்ப்பாணத்தில் வைத்து வழங்கியிருக்கின்றனர்.

இது பெரும் குற்றமாகும். தேர்தல் காலங்களில் இவ்வாறான உதவிகளைச் செய்ய முடியாது. இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் எல்லாம் இதற்கான தடைகள் இருக்கின்றன. ஆனால், யாழ்ப்பாணத்தில் அவை மீறப்படுகின்றன.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டது. அதனோடு எல்லாப் பிரச்சினையும் முடிந்துவிட்டது என்பதை உலகுக்கு வெளிக்காட்டவே அரசு இந்த தேர்தலை நடத்துகின்றது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை, .நா. பொதுச் செயலாளர், ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட பல உலக நாடுகள் இந்த தேர்தலை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன.

இதனாலேயே இந்த தேர்தல் முக்கியமானதாக இருக்கின்றது. இதற்காகவே நாம் இந்த தேர்தல்களில் போட்டியிடுகின்றோம்.

வவுனியா நகரசபை, யாழ்ப்பாணம் மாநகரசபை போன்றவற்றுக்காக நடைபெறவுள்ள இந்த தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையுடனான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று ஒஸ்லோவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை இலங்கை சுதந்திரக் கட்சியோ, அதிபர் மகிந்த ராஜபக்சவோ அப்போது எதிர்க்கவில்லை. ஏனெனில் தமிழ் மக்களுக்குக்கான தீர்வு அதுவே என்பது அவர்களுக்கும் தெரியும்.

13
ஆவது திருத்தச் சட்டத்தின்படி நிலம் வழங்கல், காவல்துறை உட்பட விவசாயம், கைத்தொழில் போன்ற அனைத்தும் மத்திய அரசிடம் இருக்கின்ற நிலையில் அங்கு பொறுப்பாக இருக்கின்ற ஒருவரைச் சார்ந்ததாக இருக்கின்ற நிலையிலான தீர்வு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது.

குறிப்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் போன்றோர் தனித்து எந்தவிதமான முடிவையும் எடுக்க முடியாத நிலையில் இருப்பது இன்று அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவந்த பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஆட்சியே இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையும். இது எங்களால் பெற முடியாதது அல்ல. பெற முடியாது என்று கருதுபவர்கள் ஒதுங்கியிருங்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இந்த தீர்வுத் திட்டத்தையே தயாரித்துக் கொண்டிருக்கின்றது. மிக விரைவில் இதனை அரசிடமும் இந்தியா உட்பட்ட அனைத்துலக சமூகத்திடமும் முன்வைப்போம் என்றார் அவர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன், சாலமன் சு.சிறில், துரைரட்ணசிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment