முன் பக்கம் கவிதைகள் கட்டுரை சினிமா புத்தகங்கள் சிறுகதைகள் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம் பங்குச் சந்தை
*கொழும்பு: தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

Saturday, June 6, 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு: 5. மொழியியல் ஆராய்ச்சியின்படி சிங்களம் திராவிட இனமொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்கிறார் மொழி இயலாளர் எச்.எஸ். டேவிட்

மொழியியல் ஆராய்ச்சியின்படி சிங்களம் திராவிட இனமொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்கிறார் மொழி இயலாளர் எச்.எஸ். டேவிட் (டேவிட் 1981-இல் யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட செய்தி கேட்டு மாரடைப்பால் மரணமுற்றவர்). (1)* ""சிங்களம் இலங்கைத் தீவில் பேசப்பட்டதை கி.மு. 2000-த்துடன் இணைக்கலாம். அப்போது அம்மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை; பேச்சு வழக்கில் மட்டுமே அம்மொழி இருந்தது. அந்தப் பேச்சு வழக்கோ ஆதிகால திராவிட இன மொழிக் குடும்பத்தில் பிறந்தது. அப்படிப் பிறந்தனவே தமிழ், சிங்கள மொழிகள்'' என்கிறார். மொழியியல் அறிஞர் ஆக்ஸிமோரன் (nashhmrlry).(2)* பழந்தமிழர் இலக்கியங்களில் இலங்கை "ஈழம்' என்றே குறிப்பிடப்படுகிறது. ஈழு என்ற திராவிட மொழியிலிருந்து ஈழம் பிறந்தது.

இம்மொழியே இப்பொழுது "எலு' என்ற மொழி. தமிழுக்கும் முந்தைய திராவிட மொழியாகும்; இது திருந்தாத பேச்சு வழக்கு மட்டுமே உள்ள மொழியாகும். இதற்கு இலக்கியமோ, இலக்கணமோ கிடையாது. இப்படிப் பழந்தமிழ் வடிவம் இங்கு வழக்கில் இருந்தபோதுதான் புத்தமதம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இலங்கையில் நுழைகிறது. அப்போதுதான் பாலி மொழி இலங்கைக்குள் அடியெடுத்து வைக்கிறது.

பேச்சு வடிவத்தில் இருந்த ஈழமொழியின் மீது பாலியும் சம்ஸ்கிருதமும் ஆதிக்கம் செலுத்த, இந்த ஆதிக்கத்தின் விளைவால் உருவான கலப்பு இன மொழியே சிங்கள மொழியாகும். அதனாலேயே தமிழ்மொழியில் உள்ள அநேக சொற்கள் சிங்களத்திலும் கலந்து இன்று வரை பேசப்பட்டு வருகின்றன. தமிழ்தேவி, சோழமக்கள், அன்னியக்கரை, மறுகரை போன்றவை மகாவம்சத்தில் காணப்படும் தமிழ்ச் சொற்களாகும். (3)* கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் ஆதிக்கத்தில் இலங்கை வந்த பிறகே சிங்களமொழிக்கென எழுத்து வடிவம் கிடைத்தது என்பது அறிஞர்கள் பலரின் கருத்தாகும். தமிழர்கள் புத்த மதத்துக்கு தீராத விரோதிகளாக என்றும் இருந்ததில்லை.

அவரவர் தத்தமது மதக் கொள்கையை கடைப்பிடித்து வந்தனர் என்பதற்கும் சான்றுகள் இலங்கையில் மட்டுமல்ல; தென்னிந்தியாவிலும் உண்டு. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலையும், சீவகசிந்தாமணியும் புத்தமத்தை உயர்த்திப் பிடித்திருக்கின்றன. இலங்கையிலோ தமிழர்களும் புத்த மதப்பீடத்தில் தலைமைக் குருமார்களாக பொறுப்பு வகித்து சிறப்பித்திருக்கிறார்கள்.

புத்த மடாலயத் தலைவர்களாக இருந்த தமிழர்கள்:

சங்கமிதா - 4-ஆம் நூற்றாண்டு புத்தமித்ரா

- 5-ஆம் நூற்றாண்டு வஜ்ரபோதி

- 7-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும். அனுராதா

- 12-ஆம் நூற்றாண்டு தர்மகீர்த்தி

- 12-ஆம் நூற்றாண்டு மற்றும் குபலன்கா

- 13-ஆம் நூற்றாண்டு.

மேலும் திக்கநாகர், (வட இந்திய நாளந்தா பல்கலைக்கழகத்தில்) தர்மபாலா போன்ற தமிழர்கள் புத்த பீடத்திற்குத் தலைவர்களாகத் தங்களது பங்கினை விரும்பி அளித்திருக்கிறார்கள். போர்த்துக்கீசியர் இலங்கைக்கு வந்தபோது இருந்த கோட்டை மன்னனின் ஆட்சிப் பகுதியில் தமிழர்கள் நிறையப் பேர் வசித்ததாகவும், மேற்கு, வடமேற்கு ஆட்சிப் பகுதியில் தமிழ்ப் பள்ளிக்கூடங்களைக் கண்டதாகவும், நிர்வாகத்தில் கூட அவர்கள் பங்கேற்றிருந்ததாகவும் போர்த்துக்கீசியக் குறிப்புகள் கூறுகின்றன.

இன்றைய சிங்கள வரலாற்று ஆசிரியர்களோ இலங்கையின் வரலாற்றை, தமிழர்-சிங்களவர் ஆகியோரின் பகைமையை அவ்விரு இனங்களும் போரிட்டுக் கொண்டே இருந்த வரலாறாகவே உள்ளது என்று திரித்து எழுதுகின்றனர். மேலும் வரலாற்றில் தமிழர்களின், தமிழ் மக்களின் கலாசாரப் பங்களிப்பை அதன்மூலம் கிடைத்த மேன்மையை இழிவுபடுத்தி, குறைத்து மதிப்பிட்டு அல்லது மறைத்துவிடும் முயற்சியில் இலங்கையின் வரலாற்றை அவர்கள் சித்திரிக்கின்றனர். இது மன்னராட்சிக் காலத்தில் தங்களது மதமான புத்த மதத்தின் மேலாண்மை வீழ்ந்தது என்ற கருத்துக் கொண்டு மதவாதிகளின் உள்ளங்களில் ஏற்பட்ட கருத்துக் குழப்பமாகும். (4)* மகாவம்சத்தையும் புத்தமத தத்துவத்தையும் விவாதிக்கையில் மூன்று நம்பிக்கைகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

(1) ஆரிய இனம் என்ற நம்பிக்கை; சிங்கள மொழி பேசும் மக்கள் இனரீதியாக ஆரிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற நம்பிக்கை.

(2) சிங்கதீவு~விஜயன் என்ற மன்னன் இலங்கைத் தீவில் அடியெடுத்து வைத்து ஆட்சியை நிலைநாட்டுவதற்கு காரணமானவன் என்ற மூட நம்பிக்கை.

(3) தர்மதீவு~புத்தரின் இலங்கையோடு உள்ள அவரது சிறப்பான உறவு பற்றிய மூட நம்பிக்கை. (5)* இவை யாவும் தவறான தத்துவங்களின் மேல் எழுந்த நம்பிக்கைகள் ஆகும். இவை ஏன் எழுப்பப்பட்டன? கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இலங்கையில் வடபகுதியைத் தமிழர்கள் கைப்பற்றி ஆண்டபோது வெறுப்புற்ற புத்த மதவாதிகளால் தோற்றுவிக்கப்பட்ட பொய்யான கருத்துக்களே இவை.

அப்போது உறுதியான தேசியத் தத்துவம் எதையும் புத்தர்கள் கொண்டிருக்கவில்லை. தங்களின் தனித் தன்மைக்கு ஒரு தத்துவத்தைத் தேடிக் கொண்டிருக்கையில் இது பிறந்தது. (6)* இதன் மூலம் "இன மேலாண்மை, நாகரிகப் புகழ்பாடுதல், ஆரிய இனத்துடன் சிங்கள இனத்தை இணைத்த கடந்த காலத்துதி, புத்த கலாசார நம்பிக்கை முதலியவற்றை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்' என்று வரலாற்று ஆய்வாளர் டாக்டர் குமாரி. ஜெயவர்த்தனே குறிப்பிடுகிறார். சுருக்கமாகச் சொன்னால், வரலாற்றைப் பொய்யாக்கி, தொன்று தொட்டு வாழ்ந்தவரைத் தாழ்ந்தவராக்கி, பெரும்பான்மைத் திமிராலும், அதிகார சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் ஆணவத்தாலும் தமிழர்கள் உரிமைக்கு உலைவைத்து, உயிருக்கு விலைவைத்து, உடமைக்குத் தீவைத்து, தமிழ் இனத்தையே பூண்டோடு அழித்து வரும் கொடுமையான நிலைமை திடீரென்று குதித்து விடவில்லை. படிப்படியாக, திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அந்தத் திட்டம் பெரும் அளவிற்கு வெற்றியும் பெற்றிருக்கிறது. ஆனால், வரலாற்றில் இந்த ஒழிப்பு முறைக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட தமிழ் இனம் தொடர்ந்து போராடி வந்திருக்கிறது. அந்தப் போராட்டம் இறுதி வெற்றி வரை தொடரும் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழன் இலங்கை மண்ணுக்குச் சொந்தக்காரன்~முதல் பங்குதாரன் என்ற உண்மையை கடந்த இரண்டாயிரம் ஆண்டு கால வரலாறு, நமக்குப் புலப்படுத்துகிறது.

தினமணி நாளிதழுக்கு நன்றி!

No comments:

Post a Comment