கொழும்பு: தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
கொழும்பில் பல்வேறு தமிழர் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய அவரிடம் வட பகுதியில் சிங்களர்கள் குடியேற்றப்பட்டு வருவது குறித்து முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ராஜபக்சே, கொழும்பில் தமிழர்கள் வசிக்கும்போது, வடக்குப் பகுதியில் ஏன் சிங்களர்கள் வசிக்கக் கூடாது?. அப்பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதை யாராலும் தடுக்க முடியாது. அங்கு அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாம்களை அகற்ற முடியாது என்றார்.
அதே போல அரசியல் கைதிகள் மற்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களையும் விசாரணை முடியாமல் விடுதலை செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.
ராஜபக்சே-கிருஷ்ணா சந்திப்பு:
இலங்கை சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, கொழும்பில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை நேற்று சந்தித்தார்.
அப்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர் மறுவாழ்வுப் பணிகளை விரைவுபடுத்துமாறும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதைத் தடுத்து நிறுத்துமாறும் வற்புறுத்தினார்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பது, படகுகளை சேதப்படுத்துவது, அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த உத்தரவிடுமாறும் கோரிக்கை விடுத்தார்.
பின்னர் இந்தியா, இலங்கை கூட்டு குழுவின் கூட்டத்திலும் கிருஷ்ணா பங்கேற்றார். இக் கூட்டம் 2005ம் ஆண்டுக்கு பின் இப்போது தான் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ், தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொடுப்பது பற்றி அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பிறகு தமிழர் பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றுதல், மறுகுடியமர்த்தல் ஆகியவற்றில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறாம்.
அந்தப் பணிகள் முடிந்ததும் அதிகார பகிர்வு குறித்த நடவடிக்கைகள் தொடங்கும். இது தொடர்பாக, புலிகள் இயக்கத்தின் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களுடன் அதிபர் ராஜபக்சே ஆலோசனை நடத்தியுள்ளார் என்றார்.
கிருஷ்ணா கூறுகையில், பல இன மக்கள் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இலங்கை அரசுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. முகாம்களில் உள்ள தமிழர்கள் நிலைமை குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி கவலை தெரிவித்துள்ளா. அவர்களை சொந்த இடங்களில் மறுகுடியமர்த்தும் பணிகளை விரைவு படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
தமிழர் பகுதிகளில் மக்களை மறுகுடியமர்த்த வசதியாக 50,000 புதிய வீடுகளை கட்டித் தர இந்தியா முடிவு செய்துள்ளது. அவற்றில் முதல் 1,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் துறைமுக, ரயில்வே திட்டங்களில் பங்கேற்கவும் இந்தியா திட்டமுள்ளது என்றார்.
யாழ்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம்:
மேலும் இந்தப் பயணத்தின்போது யாழ்ப்பாணத்திலும், ஹம்பன்தோடாவிலும் இந்திய துணை தூதரகங்களை எஸ்.எம். கிருஷ்ணா திறந்து வைக்கவுள்ளார்.
நேற்று ஹம்பன்தோடாவில் நடக்க இருந்த நிகழ்ச்சி, மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுவிட்டது. இன்று யாழ்ப்பாணத்தில் தூதரக திறப்பு விழாவில் பங்கேற்கும் கிருஷ்ணா, நாளை ஹம்பன்தோடா தூதரகத்தை திறந்து வைக்கவுள்ளார்.
No comments:
Post a Comment