Tuesday, January 25, 2011
நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு தெற்கு சூடான் அழைப்பு
கொழும்பு, ஜன.18- தெற்கு சூடான் விடுதலை நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அழைப்பு வந்துள்ளதாக அதன் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.இதுகுறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை தெற்கு சூடானுக்கு வருமாறு சூடான் மக்கள் விடுதலை இயக்கம் (SPLM) அழைப்பு விடுத்துள்ளது. கொண்டாட்டங்களில் பங்குகொள்ளவும், பொருத்தமான துறைகளில் தெற்கு சூடானின் மேம்பாட்டுக்குத் தமிழர் தரப்பு வல்லுநர்களின் உதவி வழங்கல் பற்றி ஆராய்வதற்காகவும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரதிநிதிகள் குழு ஒன்றை அனுப்புகிறது.சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் விருந்தினர்களாக வருகைதரும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசுப் பிரதிநிதிகள் குழுவினை சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் உயர் அதிகாரிகள் வரவேற்பார்கள். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரதிநிதிகள் ஏனைய நாடுகளின் தலைவர்களையும் அங்கு சந்திக்கவுள்ளார்கள்.நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் "நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அங்கு அழைக்கப்பட்டிருப்பது, இந்த அரசுக்கான அங்கீகாரம் மட்டுமன்றி ஈழ விடுதலைப் போராட்டத்துக்கான அங்கீகாரமும் ஆகும். தெற்கு சூடானியரின் விடுதலையைக் கொண்டாடுமாறு ஈழத் தமிழ் மக்களை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வேண்டிக்கொள்கிறது. விடுதலை பெற்ற தெற்கு சூடானியரின் மகிழ்ச்சியை ஈழத்தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வதுடன், அந்த மகிழ்வில் இணைந்தும் கொள்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.தெற்கு சூடான் போலவே தமிழ் ஈழமும் விரைவில் விடுதலை பெறுமென ஈழத்தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்.தெற்கு சூடானில் வாக்கெடுப்பு ஆரம்பித்த தினத்தன்று அமெரிக்கா அதிபர் ஒபாமா "நியுயார்க் டைம்ஸ்" பத்திரிகையில், "லட்சக்கணக்கான சூடானிய மக்கள் தமது விதியைத் தீர்மானிக்கும் வாக்கெடுப்புக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். ஒபாமாவின் இச்செய்தியை வரவேற்கும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு ஈழத்தமிழர்களும் தமது விதியைத் தாமே தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பினைச் சர்வதேச சமூகம் அதேபோல் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது.1977ல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி தமிழ் ஈழ அரசை அமைப்போம் என்று வாக்குக் கேட்ட கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மையாக வாக்களித்ததன் மூலம் ஈழத்தமிழர்கள் மிகத்தெளிவாகத் தமது விருப்பை ஏற்கெனவே தெரிவித்துவிட்டார்கள். புலம்பெயர்ந்த மக்கள் அண்மையில் பல்வேறு நாடுகளிலும் நடத்திய வாக்கெடுப்பின் மூலம் தமது தாயகத்தில் இறைமையுள்ள தனிநாடு ஒன்றை அமைப்பதற்கான தமது அரசியல் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.அடக்குமுறை அரசுகளான சூடானின் ஆட்சியாளருக்கும் இன்றைய இலங்கைவின் ஆட்சியாளருக்கும், சீனாவே செல்வாக்கு மிக்க சர்வதேசப் பாதுகாவலராகச் செயற்பட்டு வருகிறது. சூடானின் அதிபர் பஷீர் இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அதிபர் ராஜபட்ச இனப்படுகொலைக் குற்றவாளியாக விரைவில் அறிவிக்கப்படவுள்ளார்.இவ்வாறு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
eelam,
eelam tamilar,
ruthrakumaran,
tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment