வவுனியா: வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து முள்கம்பி வேலி முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
வவுனியா பூந்தோட்டத்தில், கல்வியல் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள முகாமில் நேற்று புதன்கிழமை ஏற்பட்ட மோதலில் தமிழர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளானார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முகாமில் இருந்த நபர் ஒருவரைக் கடத்திச் சென்று படையினர் சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டியே படையினருக்கு எதிரான நடவடிக்கைகளில் மக்கள் இறங்கினர் எனத் தகவல்கள் கூறுகின்றன.
படையினரின் நடவடிக்கைகளுக்கு முகாம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து அங்கு பதட்டமான நிலை ஏற்பட்டது. இதனையடுத்து இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆதரவாக அந்தப்பகுதியில் இருந்த தமிழ் மக்களும் படையினருக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து மோசமான நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் விரக்தி அடைந்திருக்கும் மக்களுக்கும் படையினருக்கும் இடையில் மோதல்கள் உருவாகும் ஆபத்து இருப்பதாக மனித உரிமை அமைப்புக்கள் ஓரிரு மாதங்களின் முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில் பூந்தோட்டம் முகாமில் மக்களுக்கும் படையினருக்கும் இடையில் நேற்று புதன்கிழமை மோதல் ஏற்பட்டுள்ளது.
மக்களின் எதிர்ப்பை அடக்குவதற்காக படையினர் அவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது இலங்கை ராணுவத்தால். ஆனால் அது தொடர்பான தெளிவான விபரத்தை காவல்துறைப் பேச்சாளர் தெரிவிக்கவில்லை.
முகாமில் இருந்த நபர் ஒருவர் அங்கிருந்து வெளியே தப்பிச் சென்றுவிட்டு திரும்பவும் ரகசிய வழி ஊடாக முகாமிற்குள் நுழைய முயற்சித்த சமயம் படையினரிடம் அகப்பட்டுக்கொண்ட சம்பவத்தை அடுத்தே அங்கே பிரச்சினைகள் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் முகாமுக்குள் நுழைய முயற்சித்த அந்த நபரைப் படையினர் கைது செய்ய முயற்சித்தபோது அவர் தப்பிச் செல்ல முயற்சித்ததால், ராணுவத்தினர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் முகாம் மக்கள் மத்தியில் எதிர்ப்பைக் கிளப்பி விட்டுள்ளது.
படையினரால் அந்த நபர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார் என மக்கள் குற்றம் சாட்டினர். ஆனால், படையினர் அந்த நபரை மீண்டும் முகாமுக்கு அழைத்து வந்து அவர் கடத்தப்படவோ கொல்லப்படவே இல்லை என்பதை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட மக்களுக்குக் காட்டினர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து வவுனியா நகரில் இருந்து பூந்தோட்டம் நோக்கிச் செல்லும் பாதைகள் உடனடியாகப் படையினரால் மூடப்பட்டன. ஊடகவியலாளர்கள் அப்பகுதிக்குச் செல்வதும் தடுக்கப்பட்டுவி்ட்டது.
Sunday, September 27, 2009
வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment