வட இந்தியர் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே அம்மண்ணில் மனித சமூகம் வாழ்ந்துள்ளது. அவர்கள் இயல்பாகப் படிப்படியாக நாகரிகமடைந்துள்ளனர். அவர்கள் (பூர்வகுடிகள்) திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். இத் திராவிடர்களின் காலமும், தென்னிந்தியத் தமிழர்களின் காலமும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை. தென்னகத்திலும் இலங்கையிலும் கிடைத்த சான்றுகளின்படி இரு பகுதிகளினது சமூக நாகரிகமும் ஒத்தே உள்ளன. அப்பகுதி வாழ் மக்கள் குளங்களின் மூலம் விவசாயம் செய்யும்-குடியிருப்பு விவசாயம் மேற்கொண்ட நாகரிகச் சமூகமாகும். ஆக, இலங்கைக்கு ஆரியர்கள் (விஜயன்) வருவதற்கு முன்னரே அப்பகுதி மக்கள் விவசாயத்தை அறிந்து இருந்தனர் என்பது தெளிவாகும்.
ஆனால் சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் இந்தோ ஆரியர்கள்தான் இலங்கைத் தீவிற்கு வந்து விவசாயத்தை அறிமுகம் செய்தார்கள் என்று கூறுகின்றனர். மேற்காணும் சான்றுகளின் மூலம் அந்த வாதம் வரலாற்றைத் திரித்துக் கூறும் மிகப்பெரிய பொய் என்பது தெளிவாகும். இதைப்பற்றி இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சி இயக்குநர் ஒருவர், "ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட எல்லாள மன்னன், கடவுளாக மதிக்கப்பட்டு வணங்கப்படுகிறான் என்றால், அவனது செல்வாக்கு அசாத்தியமானது' என்கிறார்.
மகாவம்சம் குறிப்பிடும் தமிழ் மன்னனின் புகழ்ச்சியைப் பொறுத்துக் கொள்ளாத சிங்கள வரலாற்று ஆய்வாளர்கள், தமிழ் மன்னனின் செல்வாக்கு, வீரம் ஆகியவற்றை மறைத்து, துட்டகாமினியின் செயலைப் புகழ்ந்து புத்தமத கலாசாரத்தின் சிறப்பம்சமாக, அதன் மேன்மையை வெளிப்படுத்துவதாக இந்நிகழ்ச்சிக்கும் புதிய விளக்கம் அளிக்கின்றனர். சிங்களவரின் வரலாறாகக் கருதப்படும் மகாவம்சம், எல்லாளன் என்ற தமிழ் மன்னனுக்கும் துட்டகாமினி என்ற சிங்கள மன்னனுக்கும் நடந்த போரைக் குறிப்பிடுகிறது.
* (1) இந்தப் போர் கி.மு. 161-இல் நடந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. மன்னர்கள் சார்பில் படைவீரர்கள் மோதுவது உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும். ஆகவே, இதைத் தவிர்க்கும் பொருட்டு இரு மன்னர்களும் யானை மீது அமர்ந்து மோதினர். எல்லாளன் யானை துட்டகாமினியின் யானையான கந்துலனைவிட உருவத்தில் சிறியது. உயரத்தில் பெரிய யானையான கந்துலன் மீது அமர்ந்து துட்டகாமினி வீசிய வேலால் தாக்குண்டு எல்லாளன் இறந்தான். எல்லாளன் எதிரி என்றும் கருதாமல், அவனது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு, அவனை அடக்கம் செய்த இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்றும் எழுப்புகிறான் துட்டகாமினி. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சம் மேலும் அதைப் பற்றிக் குறிப்பிடுவது என்னவென்றால், ""இளவரசர்கள் அனைவரும் அந்த நினைவுச் சின்னத்திற்குச் சென்று இன்றும் கூட அஞ்சலி செலுத்துகிறார்கள்'' என்பதாகும்.
இதன் மூலம் தெரிவது இரு சமூகக் குழுக்களும் ஆரம்ப நாட்களிலிருந்தே பகைமை கொண்ட சமூக குழுக்களா என்றால், இல்லை. இரு மன்னர்கள் தங்கள் தங்கள் ஆட்சியை நிலைநாட்ட எடுத்துக்கொண்ட யுத்தங்கள்தான் அவை. இரண்டு இனங்களிலும் அக்கம் பக்கமிருந்து சட்டம், சாதிமுறை, சமூக அமைப்பு முதலியவற்றில் ஒரே சீரான நடைமுறைதான் தொடர்ந்து பேணப்பட்டு வந்திருக்கிறது என்பது புலனாகும். அடுத்து, வரலாற்றுக் காலத்தை எடுத்துக் கொண்டால் ஏழாம் நூற்றாண்டில் நரசிம்ம பல்லவன் புலிகேசியுடன் போர் புரிந்தபோது இலங்கை அரசன் மானவர்மன் படைத் தலைவனாகச் சென்றதாக சரித்திரக் குறிப்பு ஒன்று கூறுகிறது. இதற்குப் பிரதியுபகாரமாக நரசிம்ம பல்லவன் இலங்கை மன்னனான மானவர்மனுக்கு உதவியாக பெரும் படையொன்றை அனுப்பி, அவன் இழந்த நாட்டை மீட்டுத் தந்ததாக காசுக்குடிப் பட்டயம் கூறுகிறது. சோழ அரசன் முதலாம் பராந்தகனுக்கும் பாண்டிய மன்னன் இராசசிம்மனுக்கும் நடந்த போரில் பாண்டியன் தோற்கிறான். அவன் தனது அரச முடியையும், அரசியின் முடியையும், இந்திர ஹாரத்தையும் இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தனிடம் அளித்துவிட்டு சேரநாடு ஓடுகிறான்.
பாண்டியனின் குலச்சொத்தை கைப்பற்றச் சோழ அரசர்கள் பலமுறை படையெடுப்பை நடத்துகிறார்கள். பராந்தக சோழனின் மகன் சுந்தரசோழன் ஆட்சியிலும், அவனது மகன் இராஜராஜசோழன் ஆட்சியிலும் கூட படையெடுப்பு நிகழ்கிறது. முடிவில் இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன் சிங்களவரைக் கொன்றதோடு "முன்னவர் பக்கல் தென்னவன் வைத்த சுந்திரமுடியும், இந்திரஹாரமும் அங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்' திரும்பப் பெற்றதாக ஒரு கல்வெட்டு மூலம் பெருமை கொள்கிறான். சோழர்கள் இலங்கை கொண்ட சோழராக மாறி அந்நாட்டை ஒரே மண்டலமாக்கி அநுராதபுரத்தை தலைநகராக மாற்றி ஆட்சி புரிகின்றனர்.
மேலும் இலங்கையின் வரலாற்றுச் சான்றுகளை வைத்து மதிப்பீடு செய்த அறிஞர், "நேரிடையாகவும் மறைமுகமாகவும் கிடைக்கும் சான்றுகளை வைத்துப் பார்க்கும்போது, இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் சிறந்த நாகரிகம் உடையவர்களாகவும் குடியிருப்புப் பாசன விவசாயத்தை மேற்கொண்டவர்களாகவும் இருந்தனர்.
இச்சமூக மக்கள் வட இந்திய மொழி பேசும் மக்களுக்கு முந்தைய காலகட்டத்து மக்கள் சமூகமாகும்' (டாக்டர் சுசந்தா குணதிலகா~"சாட்டர்டே ரிவ்யூ'~30, டிசம்பர் 1983) என்கிறார். இதன் மூலம் சிங்கள அறிஞர்கள் கூறும் ஆரியர்கள் குளநீர்ப் பாசன விவசாயத்தை இலங்கைத் தீவில் அறிமுகம் செய்தனர் என்பது தவறான கூற்றாகும் என்பது தெளிவு.
தினமணி நாளிதழுக்கு நன்றி!
Saturday, June 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment