கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமார துங்கா மீண்டும் தீவிர அரசியலில் குதிக்கிறார். அவரது மகன் விமுக்தி குமாரதுங்காவும் அரசியலில் நுழைகிறார். அவரை தேர்தலில் நிறுத்தவும் சந்திரிகா திட்டமிட்டுள்ளார்.
இலங்கையில் ராஜபக்சேவுக்கு எதிராக முக்கிய எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு மெகா கூட்டணியை அமைக்கவுள்ளன. இதற்கான முயற்சியில் முன்னாள் அமைச்சரும், சந்திரிகாவுக்கு நெருக்கமான தலைவருமான மங்கள சமர வீரா மேற்கொண்டுள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சே கட்சியை வீழ்த்தும் வகையில் இந்த வியூகங்களை வகுத்து வருகிறார் சமரவீரா. இவர் ஆளும் சுதந்திராக் கட்சியைச் சேர்ந்தவர்தான். ஆனால் ராஜபக்சேவாவால் ஒதுக்கப்பட்டவர். இதனால் அங்கிருந்து வெளியேறி சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள்) என்ற புதுக் கட்சியைத் தொடங்கியுள்ளார்.
ராஜபக்சே ஆட்சிக்கு வந்த பின்னர் அவரது குடும்பத்தினர்தான் ஆட்சியில் கோலோச்சி வருகின்றனர். பண்டார நாயக்கே குடும்பத்தினர் ஓரம் கட்டப்பட்டு விட்டனர்.
இதையடுத்தே பண்டாரநாயக்கே குடும்பத்துக்கு நெருக்கமானவரான சமரவீரா, மீண்டும் பண்டாரநாயக்கே குடும்பத்தை தீவிர அரசியலுக்கு இழுத்து வரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவில் இருந்து பிரிந்துசென்ற நவ ஹெல உறுமய ஆகியவை இணைந்து புதிய பெரும் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளன.
இந்தக் கூட்டணியின் சார்பில் அடுத்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் சந்திரிகாவின் ஒரே ஆண் வாரிசான விமுக்தி குமாரதுங்கவை நிறுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சந்திரிகாவை எம்.பி. தேர்தலி்ல் நிறுத்தி வெற்றி பெற வைத்து அவரை பிரதமராக்கவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒருவர் 2 முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும். சந்திரிகா ஏற்கனவே 2 முறை அதிபராக இருந்து விட்டார். எனவே அவரால் மீண்டும் அதிபராக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், அவர் எம்.பியாக முடியும். எம்.பியானால் அவர் பிரதமராவது எளிது என்பதால், பிரதமர் பதவிக்கு சந்திரிகாவைக் கொண்டு வர திட்டமிடப்பட்டு வருகிறது.
உள்ளூர் அரசியலில் இனிமேல் தான் ஈடுபடப்போவதில்லை என சந்திரிகா ஏற்கனவே அறிவித்திருந்த போதிலும், தற்போது உருவாக்கப்படும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பின்னணியில் அவரின் செயற்பாடுகளும் முக்கியமானதாக இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி இம்மாத இறுதிக்குள் அதிகாரபூர்வமான முறையில் பிரகடனம் ஒன்றை வெளியிடும் எனவும், அதில் புதிய கூட்டணியின் சின்னம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறும் எனவும் தெரிகிறது.
Saturday, August 8, 2009
மீண்டும் அரசியலில் சந்திரிகா-மகனை தேர்தலில் நிறுத்துகிறார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment