வன்னி போர்ப் பகுதியில் ஆயிரக்கணக்கான சவக்குழிகள் இருப்பதை இந்த சாட்டிலைட் படங்கள் காட்டுகின்றன. அந்த இடங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிரோடோ அல்லது கொன்றோ புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இலங்கை ராணுவம் கனரக ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களை கொன்று குவித்திருப்பதும் புலனாகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான கால கட்டத்தில், 7000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் அதை விட மிகப் பெரிய அளவில், பல ஆயிரக்கணக்கான அப்பாவிகளை இலங்கைப் படைகள் கொன்று குவித்துள்ளதாக ஆம்னஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.
இந்த நிலையில், வன்னிப் போர்ப் பகுதியில் மிகப் பெரிய அளவில் உள்ள சவக்குழிகளின் சாட்டிலைட் படங்களை ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. மொத்தம் மூன்று பெரிய சவக்குழிகள் இதில் காணப்படுகின்றன. ஆனால் மொத்தம் 1346 சவக்குழிகள் இருப்பதாக ஆம்னஸ்டி தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 19ம் தேதி எடுக்கப்பட்ட சாட்டிலைட் படத்தில் எந்த சவக்குழியும் இல்லாமல் இருந்தது. ஆனால் மே 24ம் தேதி எடுக்கப்பட்ட சாட்டிலைட் படத்தில் 342 சவக்குழிகள் முளைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சவக்குழிகள் அப்பாவித் தமிழர்கள் புதைக்கப்பட்டார்களா அல்லது விடுதலைப் புலிகள் புதைக்கப்பட்டார்களா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று ஆம்ன்ஸ்டி கூறியுள்ளது.
இந்த சாட்டிலைட் படங்களை அமெரிக்க மேம்பட்ட அறிவியல் கழகம் ஆய்வு செய்து முடிவுகளைத் தெரிவித்துள்ளது.
புதிதாக கிடைத்துள்ள சாட்டிலைட் படங்களில் கிட்டத்தட்ட 17 இடங்களில் மார்ட்டர் தாக்குதல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அத்தனையும் மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதிகளாகும். மேலும் இந்த இடங்கள் பாதுகாப்பு வளையப் பகுதிகளாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளாகும்.
இந்தப் பகுதிகளுக்கு வருமாறு அப்பாவி மக்களை இலங்கை அரசும், ராணுவமும்தான் அழைத்தன. ஆனால் இங்கு வந்து சேர்ந்த மக்களைத்தான் ராணுவம் கொடூரமாகக் கொன்று குவித்தது.
புதிய சாட்டிலைட் படங்கள் குறித்து ஆம்னஸ்டி அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான கிறிஸ்டோப் கோயட் கூறுகையில், இலங்கை ராணுவம் அப்பாவி மக்களை பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவழைத்து அங்கு தாக்குதல் நடத்தியிருப்பது தற்போது உறுதியாகிறது என்றார்.
இந்த நிலையில், இலங்கை பாதுகாப்பு த் துறை செய்தித் தொடர்பாளர் கெகலிய ரம்புகவல்லா இந்த புகாரை மறுத்துள்ளார். இது உண்மையற்றது, ஏற்றுக் கொள்ளமுடியாதது, ஒருதலைபட்சமானு என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் அது போர்ப் பகுதி, விடுதலைப் புலிகள் மார்ட்டர் தாக்குதல் களில் ஈடுபட்டு சொந்த மக்களையே கொன்றனர். அவர்கள்தான் இந்த சவக்குழிகளை தோண்டியிருக்க வேண்டும் என்றார்.
போர் முடிந்து 3 மாதங்களைத் தாண்டியும் கூட இன்னும் சர்வதேச மனித உரிமை அமைப்பினரையோ, சர்வதேச பத்திரிக்கையாளர்கள், உள்ளூர் பத்திரிக்கையாளர்களையோ, செஞ்சிலுவைச் சங்கத்தினரையோ போர் நடந்த வன்னிப் பகுதிக்கு அனுமதிக்காமல் தடுத்து வருகிறது இலங்கை அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கிடைத்துள்ள புகைப்படங்கள் மூலம் மிகப் பெரிய அளவிலான மனித உரிமை மீறல், மனிதாபிமான மீறல் நடவடிக்கைகள் நடந்திருப்பதாக அனுமானிக்க முடிகிறது. எனவே சுயேச்சையான விசாரணை ஒன்று சர்வதேச அளவில் நடைபெற வேண்டியது அவசியம் என்றும் ஆம்னஸ்டி வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment