முன் பக்கம் கவிதைகள் கட்டுரை சினிமா புத்தகங்கள் சிறுகதைகள் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம் பங்குச் சந்தை
*கொழும்பு: தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

Wednesday, August 12, 2009

வவுனியா நகராட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு வென்றது - யாழ், ஊவாவில் ராஜபக்சே கட்சி வெற்றி

கொழும்பு: இலங்கையில் நடந்த உள்ளாட்சி மற்றும் ஊவா மாகாணத் தேர்தலில் கலப்பு முடிவு வெளியாகியுள்ளது. வவுனியா நகராட்சித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் யாழ்ப்பாணம் நகராட்சி மற்றும் ஊவா மாகாணத் தேர்தலில் ஆளுங்கட்சிக் கூட்டணி வென்றுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழ் அரசுக் கட்சி என்ற பெயரில் இந்த தேர்தல்களை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் நகராட்சிக்கான தேர்தல் முடிவுகளில், ஆளும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 13 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

2வது இடத்தைப் பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு 8 இடங்களில் வென்றுள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சுயேச்சைகளுக்கு தலா 1 இடம் கிடைத்துள்ளது.

வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி...

வவுனியா நகராட்சியில், தமிழ் தேசிய கூட்டமைப்பு 5 இடங்களிலும், பிளாட் அமைப்பின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி 3 இடங்களையும் வென்றது.

இங்கு ஆளும் கூட்டணி 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆளும் கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2 இடங்களில் மட்டும் வென்றுள்ளது.
இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கிடைத்தது.

ஊவா மாகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 25 இடங்களையும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி 7 இடங்களையும் வென்றன.

ஜனதா விமுக்தி பெரமுனா கட்சிக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. மலையக மக்கள் முன்னணி 1 இடத்தில் வெற்றி பெற்றது.

ராஜபக்சேவுக்குப் பின்னடைவு...

வவுனியாவில் ராஜபக்சே கூட்டணி 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது ஆளும் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

30 ஆண்டு கால போர் முடிவுற்ற நிலையில் நடந்த இந்த மூன்று தேர்தல்களிலும் ஆளும் கூட்டணியே வெல்லும் என ராஜபக்சே கட்சி நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை தங்களது பிரதிநிதிகளாக தேர்வு செய்துள்ளதன் மூலம், ராஜபக்சே மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தை ஆளும் கூட்டணி பிடித்திருந்தாலும் கூட அங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு 8 இடங்களுடன் ஆளுங்கட்சிக்கு வெகு அருகில் 2வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் வெறும் 20 சதவீதம் பேரே வாக்களித்திருந்தனர். தமிழர்கள் பலர் அச்சுறுத்தப்பட்டதாகவும், வாக்களிக்கக் கூடாது என்று மிரட்டப்பட்டதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்து குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு வேளை அதிக அளவில் வாக்குப் பதிவு நடந்திருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

வவுனியாவில் 53 சதவீத வாக்குப் பதிவு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களித்துள்ளதன் மூலம் மக்கள் விடுதலைப் புலிகள் ஆதரவு நிலையிலிருந்து இன்னும் மாறவில்லை என்பது புலனாகியுள்ளது. புலிகளுக்கு ஆதரவான கூட்டமைப்பே தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஆளும் கூட்டணி 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டதும் ராஜபக்சே அரசுக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கும் விஷயம் என்பது கவனிக்கத்தக்கது.

வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறப்பான வெற்றியைப் பெற்றிருப்பதாக தேர்தல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வெற்றி பலருக்கும் வியப்பை அளிப்பதாக உள்ளது. தமிழர்கள் இலங்கை அரசை நம்பவில்லை என்பதன் வெளிப்பாடே இது என்றும் கருதப்படுகிறது.

இனப்போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த ராணுவ அடக்குமுறைகள், கொடூரமான படுகொலைகளால் மக்கள் பட்ட மனக் காயங்கள் இன்னும் ஆறவில்லை என்பதையே இது வெளிக்காட்டுவதாக உள்ளதாக வர்ணிக்கப்படுகிறது.

அரசுத் தரப்பு மற்றும் ஆயுதக் குழுக்களின் மிரட்டல்கள், மோசடிகள் அதிக அளவில் இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் அதையும் மீறி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வவுனியாவில் கிடைத்துள்ள சிறப்பான வெற்றி தமிழர்களை நீண்ட நாட்களுக்கு முகாம்களில் போட்டு அடைத்து வைத்திருக்க முடியாது, அவர்களுக்கு சம உரிமை தந்தே ஆக வேண்டும் என்ற கருத்துக்களை மீண்டும் ஆணித்தரமாக வலியுறுத்துவதாக அமைந்துள்ளது எனலாம்.

No comments:

Post a Comment