கொழும்பு: இலங்கையில் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் அவல நிலை குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பியான பத்மினி சிதம்பரநாதன், கண்ணீர் விட்டு அழுதார். அதை சலனமே இல்லாமல் சிங்கள எம்.பிக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இடம் பெயர்ந்தோர் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள குழந்தைகள், சிறுவர்கள்,பெண்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து பத்மினி இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசினார்.போரினால் கொல்லப்பட்ட மக்கள் அவர்களின் உறவுகள் தடுப்பு முகாம்களில் அவலப்படும் மக்கள், பெண்கள், குழந்தைகள் மட்டுமல்லாது அவர்களின் உறவினர்கள் பார்வையிடும் போது கண்ணீர் விட்டு அழுவதையும் சுட்டிக் காட்டினார்.
அப்போது அவரால் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் அழுது விட்டார். தொடர்ந்து பேச முடியாமல் சிறிது நேரம் பேசுவதை நிறுத்திய பத்மினி பின்னர் கண்ணீரை அடக்கிக் கொண்டு மீதி உரையையும் பேசி முடித்தார்.
அவர் அழுதபடி பேசியதை சிங்கள உறுப்பினர்கள் சலனமின்றி பார்த்துக் கொண்டிருந்தனர்.
வான் புலிகளால் ரூ. 104 கோடி இழப்பு:
இலங்கைத் தலைநகர் கொழும்பில் கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி நடத்தப்பட்ட வான்புலிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலில் வருமான வரித்துறைக்கு ரூ. 104 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு அமைச்சர் திணேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
வன்னியில் போர் உக்கிரமடைவதற்கு முன்பு, பிப்ரவரி மாதம் 20ம் தேதி விடுதலைப் புலிகளின் வான் புலிகள் பிரிவு, விமானம் மூலம் கொழும்பில் உள்ள வருமான வரி அலுவலகத்தைத் தாக்கினர்.
இதில் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இந்தத் தாக்குதலை நடத்திய வான் புலிகள் பிரிவைச் சேர்ந்த சிரித்திரன், ரூபன் ஆகிய இருவரும் மரணமடைந்தனர்.
இந்த அலுவலகத்தை சீரமைத்து, சரி செய்வதற்கு ரூ. 104 கோடி தேவைப்படுவதாக இலங்கை அமைச்சர் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.மேலும், தற்போது வாடகைக் கட்டடங்களில் இந்த அலுவலகம் இயங்கி வருகிறது. இதற்காக இதுவரை ரூ. 21 கோடி அளவுக்கு வாடைகக்கு செலவிடப்பட்டுள்ளதாகவும் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நன்றி தட்ஸ்தமிழ்
No comments:
Post a Comment