கொழும்பு: பெரும் மிரட்டல், அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கை நீதித்துறை உள்ளதாக சர்வதேச வக்கீல்கள் சங்கத்தின் மனித உரிமைக் கழகம் கவலை தெரிவித்துள்ளது.சமீபத்தில் இந்த அமைப்பு நடத்திய உண்மை கண்டறியும் குழுவின் விசாரணைக்குப் பின்னர் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்கள், மிரட்டல்கள் மிகவும் கவலை அளிக்கின்றன. அங்குள்ள வக்கீல்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உள்ளனர். மீடியாவின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.குறிப்பாக மனித உரி்மை தொடர்பான வக்கீல்கள் தொடர்ந்து மிரட்டப்படுகின்றனர். பலர் கடத்தப்படுகின்றனர், பலர் தாக்கப்படுகின்றனர். அதேபோல அரசை எதிர்த்துக் குரல் கொடுக்கும் பத்திரிக்கையாளர்கள், தொண்டு நிறுவனத்தினரும் கூட மிரட்டப்படுகின்றனர்.
இதுகுறித்து மனித உரிமை ஆர்வலரும், வக்கீலுமான வெலியமுனா லண்டனில் நடந்த அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியின்போது இவ்வாறு தெரிவித்தார்.மிரட்டல்கள் நீதித்துறையிலிருந்தும் வருகிறது, வெளியிலிருந்தும் வருகிறது என்றார் வெலியமுனா.
கடந்த ஆண்டு வெலியமுனாவின் வீட்டில் குண்டு வீசப்பட்டது. ஆனால் இதில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிப்பதில் போலீஸார் அக்கறை செலுத்தாமல் உள்ளனராம்.அதேபோல மூத்த வழக்கறிஞர் ஒருவரின் அலுவலகம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. அதிலும் இதுவரை யாரையும் போலீஸார் கைது செய்யவில்லை. விசாரணையும் படு மந்தமாக நடக்கிறது என்றார்.ஆனால் இந்தப் புகார்களை இலங்கை மீடியா அமைச்சர் அபயவர்த்தனே யாப்பா மறுத்துள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல வக்கீல் லார்ட் கூட்ஹார்ட் என்பவரது தலைமையில் இந்த உண்மை கண்டறியும் விசாரணை நடைபெற்றது. இவர் சர்வதேச நீதிபதிகள் கமிஷனின் முன்னாள் துணைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இலங்கை பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகளையும் இந்த விசாரணை அறிக்கை கடுமையாக சாடியுள்ளது. பாதுகாப்புத்துறையின் இணையதளத்தில், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என்று கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு ஆதரவாக வழக்கு தொடர்நதுள்ள வக்கீல்களை மனித உரிமையை மீறுவோர் என்று கூறி கட்டுரை வெளியிடப்பட்டதற்கு இந்த விசாரணை குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
வக்கீல்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை இலங்கையில் உள்ளது. பயமின்றி அவர்களால் எந்த வழக்கிலும் ஆஜராக முடியவில்லை. புலிகளின் ஆதரவாளர்கள் என்று கூறி தவறான முறையில் கைது செய்யப்படுவோருக்கு ஆதரவாக அவர்கள் செயல்பட்டால் தாக்கப்படக் கூடிய அபாயங்கள் உள்ளதாக கமிஷன் லார்ட் கூட்ஹாட் தெரிவித்தார்.
சட்ட உரிமைகளை நிலை நிறுத்த இலங்கை வக்கீல்கள் சங்கம் உறுதியுடன் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சட்டப் பேராசிரியர் ரோஹன் எடிரிசிங்கே கூறுகையில், இலங்கையில் ஜனநாயக அமைப்புகளுக்கு பெரும் ஆபத்தும், களங்கமும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை தகர்ந்து வருகிறது என்றார்.
அதிபர் ராஜபக்சே அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் பல்வேறு நியமனங்களைச் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
நன்றி தட்ஸ் தமிழ்
Thursday, July 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment