கொழும்பு: சர்வதேச நிதியம், இலங்கைக்கு 2.5 பில்லியன் டாலர் கடனுதவிக்கு இன்று ஒப்புதல் வழங்கும் எனத் தெரிகிறது. இந்த முடிவு துரதிர்ஷ்டவசமானது என்று மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவுக்கான இயக்குநர் பிராட் ஆடம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 26 ஆண்டுகளுக்கும் மேலான இனப் போரில், ஏற்பட்ட மனித உரிமை மீறல் தவறுகளை இலங்கை அரசு நிவர்த்தி செய்து கொண்ட பின்னரே இந்த கடன் தொகை வழங்கப்பட வேண்டும்.
இன்னும் 2 லட்சத்து 80 ஆயிரம் மக்களை இலங்கை அரசு வேலி போட்ட முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறது. இது முற்றிலும் மனித உரிமைகளை மீறும் செயலாகும். மேலும், பத்திரிக்கையாளர்கள், சமூக சேவையாளர்கள் உள்ளிட்டோர் மீதான தாக்குதல்கள் குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும்.
ஆனால் இவையெல்லாம் செய்யப்படாமலேயே மிகப் பெரிய கடன் தொகையை வழங்க சர்வதேச நிதியம் முன்வருவது வேதனைக்குரியது, கண்டனத்துக்குரியது, துரதிர்ஷ்டவசமானது.
ஆயிரக்கணக்கான மக்களை முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்திருக்கும் ஒரு அரசுக்கு, இவ்வளவு பெரிய கடன் தொகையை வழங்குவது மோசமான முன்னுதாரணமாகி விடும். சர்வதேச நிதியம் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
முன்னதாக 1.91 பில்லியன் டாலர் கடனுதவியைத்தான் இலங்கை கோரியது. பின்னர் இதை 2.5 பில்லியன் டாலராக அது அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் இந்த கடன் தொகையைத் தர அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால் ஐஎம்எப் கடன் தருவதை நிறுத்தி வைத்திருந்தது.
ஆனால் சீனா மற்றும் இந்தியாவின் கை மேலோங்கி வருவதைப் பார்த்த அமெரிக்கா பயந்துபோய் இலங்கைக்கு கடன் தர சம்மதித்தது என்பது நினைவிருக்கலாம்.
Saturday, July 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment