கொழும்பு: மீண்டும் தூக்குத் தண்டனை முறையைக் கொண்டு வருவது குறித்து இலங்கை அரசு பரிசீலித்து வருகிறதாம். அதிகரிக்கும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த இவ்வாறு பரிசீலிக்கப்படுவதாக அது கூறுகிறது.
ஆனால் பிடிபட்டுள்ள விடுதலைப் புலிகள் பலரை தூக்கில் போடவே இந்தத் திட்டம் தீட்டப்படுவதாக ஒரு தகவல் கூறுகிறது.
இதுகுறித்து இலங்கை சட்ட மறு சீரமைப்பு அமைச்சர் மிலிந்தா மொரகொடா கூறுகையில், நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டன. எனவே மீண்டும் தூக்குத் தண்டனையைக் கொண்டு வருவது குறித்து அதிபர் ராஜபக்சேவுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
கடந்த காலங்களில் கடுமையான குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டன. மனித உரிமைப் பிரச்சினை என்று கூறப்பட்டாலும் கூட பல நாடுகளில் தூக்குத் தண்டனை இன்னும் அமலில் உள்ளது.
அமெரிக்காவில் கூட கடுமையான குற்றங்களைச் செய்தவர்களுக்கு மரண தண்டனையை பல்வேறு மாகாணங்கள் நிறைவேற்றியுள்ளன என்றார் அவர்.
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 273 பேர் தண்டனையை நிறைவேற்ற காத்துள்ளனர். ஆனால் அதிபரின் உத்தரவில்லாமல் இவர்களைத் தூக்கில் போட முடியாது என்பதால் சிறையிலேயே இவர்கள் அடைபட்டுள்ளனர்.
இலங்கையில் கடைசியாக 2003ம் ஆண்டு மரு சிரா என்பவர் தூக்கில் போடப்பட்டார். அதன் பிறகு யாரும் தூக்குத் தண்டனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் முக்கிய விடுதலைப் புலிகளை தூக்கில் போடும் உத்தேசத்துடன்தான் தூக்குத் தண்டனையை மீண்டும் கொண்டு வர இலங்கை யோசிப்பதாக ஒரு தகவல் கூறுகிறது
No comments:
Post a Comment