கொழும்பு: வெள்ளம் நிறைந்த சதுப்பு நிலத்தில் மக்கள் வாழும் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. அங்குள்ள கூடாரங்களில் தங்கியுள்ள மக்களை மனிதர்களாக மதித்து அங்கிருந்து வெளியேற்றி பள்ளிக் கூடங்களிலாவது தங்க வைக்கவேண்டும் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அதிபர் ராஜபக்சேவின் ஆலோசகருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மனிதர்களை மிருகங்களாக நடத்தாது மனிதர்களாக மதித்து வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வெள்ளத்திற்கு மத்தியில் முகாம்களில் வாழும் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றி பள்ளிகளிலாவது தங்க வைக்கவேண்டும்.
இதற்காகப் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டாலும் பரவாயில்லை. அது மட்டுமல்லாது அந்த மக்கள் தாங்கள் விரும்பிய இடத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். அதை விடுத்து முள் கம்பி வேலிகளுக்குள் வெள்ளத்திற்கு மத்தியில் கூடாரங்களில் மக்களை தங்க வைப்பது மனிதாபிமானமற்ற செயலாகும்.
தமிழர்களை தொடர்ந்தும் முகாம்களில் தங்க வைக்காமல் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான திட்டங்களை அரசாங்கம் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் தேசிய, சர்வதேச ரீதியில் அதிகரிக்கும். தமிழ் மக்களின் நம்பிக்கையை அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ள முடியாது போகும்.
அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும்.
மனிதர்களை மனிதர்களாக மதித்து வாழ்வதற்கான சிறந்த சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதற்காக உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
Monday, August 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment