கொழும்பு: இலங்கை இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கு தமிழர்கள், அதிபர் தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார் அதிபர் ராஜபக்சே.
விடுதலைப் புலிகளுடனான போருக்கு முன்பு ஒரு மாதிரி பேசி வந்தார் ராஜபக்சே. போர் முடிந்ததும், தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்தும் செய்யப்படும் என்றார். நாடாளுமன்றத்தில் பேசும்போது கூட தமிழர்கள் எங்களது சகோதரர்கள், அவர்களைக் காப்பது எங்களது கடமை என்றார்.
ஆனால் போர் முடிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர் அதுகுறித்த எந்தத் திட்டத்தையும் இலங்கை அரசிடமிருந்து காணோம்.மேலும் அதிகாரப் பகிர்வு, 13வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், அரசியல் தீர்வு குறித்து இலங்கை அரசிடமிருந்து உறுதியான நடவடிக்கை எதுவும் இல்லை. இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும் 3 லட்சம் தமிழர்களை அவரவர் சொந்த ஊர்களில் குடியமர்த்தும் திட்டமும் இல்லை.
இந்த நிலையில், அதிபர் தேர்தல் முடியும் வரை அரசியல் தீர்வுக்கு தமிழ் மக்கள் காத்திருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் ராஜபக்சே.
இதற்கு முக்கிய காரணம், தற்போது ராஜபக்சேவின் அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை. சிங்கள கட்சிகள் மற்றும் தமிழ் கட்சிகளின் துணையுடன்தான் அவரது ஆட்சி உள்ளது.
தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க சிங்கள இனவாத கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் அரசியல் தீர்வை இப்போது அறிவிப்பது சிக்கல்களை ஏற்படுத்தும் என அவர் நினைப்பதாக தெரிகிறது.\
புலிகளை அழித்து விட்டதால் மக்கள் செல்வாக்கு கூடியிருப்பதாக கருதுகிறார் ராஜபக்சே. எனவே அதிபர் தேர்தலில் அபார வெற்றி பெற்றால், ஜாதிக ஹெல உருமயா, ஜனதா நிதஹால் சந்தன்யா போன்ற சிங்கள இனவெறிக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படாது. சுயேச்சையாக முடிவுகளை எடுக்க முடியும் என்பதால் அதிபர் தேர்தல் முடியும் வரை முக்கிய முடிவுகளைத் தள்ளி் போட அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து அவர் கூறுகையில், யாருக்கு என்ன தர வேண்டும், என்ன தரக் கூடாது என்பது குறித்து எனக்குத் தெரியும். என்ன தர வேண்டும் என்பதை தருவதற்காக நான் காத்திருக்கிறேன். ஆனால் தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டும். அதன் பிறகுதான் அரசியல் தீர்வு காண முடியும் என்றார் அவர்.2005ம் ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானார் ராஜபக்சே. அப்போதைய தேர்தலில் தமிழர்களை தேர்தலைப் புறக்கணிக்குமாறு பிரபாகரன் கூறியிருந்ததால் அது ராஜபக்சேவுக்கு சாதகமாகி விட்டது. தமிழர்கள் மட்டும் அன்று வாக்களித்திருந்தால் ராஜபக்சே அப்போதைய தேர்தலில் ஜெயி்த்திருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். எனவே 2011ம் ஆண்டுதான் அங்கு அதிபர் தேர்தல் வருகிறது. ஆனால் தற்போது கிடைத்துள்ள புதிய செல்வாக்கை மனதில் கொண்டு வருகிற நவம்பர் மாதமே தேர்தலை நடத்தி விட ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
நன்றி தட்ஸ்தமிழ்
No comments:
Post a Comment