முன் பக்கம் கவிதைகள் கட்டுரை சினிமா புத்தகங்கள் சிறுகதைகள் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம் பங்குச் சந்தை
*கொழும்பு: தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

Saturday, July 18, 2009

வைகோவின் `குற்றம் சாட்டுகிறேன்'!

சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோ இலங்கை பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு `குற்றம் சாட்டுகிறேன்' என்ற தலைப்பில் தமிழிலும், `ஐ அக்யூஸ்' என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் நூல்களாக வெளியாகியுள்ளன.

இந்த நூல்களின் வெளியீட்டு விழா சென்னை ராணி சீதை அரங்கில் நடந்தது.

நூல்களை தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட, முதல் பிரதியை கவிஞர் இன்குலாப் பெற்றுக்கொண்டார்.

விழாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் மகேந்திரன், மதிமுக கொள்கைப் பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில்,

கடந்த 1987 முதல் ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் செய்து வருகிறது. இலங்கையில் நடக்கும் தமிழினப் படுகொலை போரை தடுத்து நிறுத்தும்படி இந்திய அரசை நான் பலமுறை தொடர்ந்து கேட்டேன். ஆனால் கடைசி நிமிடம் வரை போரை நிறுத்தும்படி இந்தியா சொல்லவில்லை.

தமிழின உணர்வுடன்தான் தமிழர்கள் போராட்டம் நடத்தினார்கள். ராணுவ வாகனத்தை தாக்கியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை போட்டதை ஜனாதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார். இது திமுக அரசின் கன்னத்தில் விழுந்த அறை.

இலங்கையின் ஒருமைப்பாட்டை காப்பாற்ற இந்தியா ஆயுதம் கொடுத்தால், தமிழ் ஈழம் அமைய இங்குள்ள தமிழர்கள் உதவி செய்வார்கள்.

ராஜபக்சேவுக்கு கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி பேசுகிறார். ஈழத்தமிழர்கள் நடத்தப்படும் விதமும், இங்குள்ள தமிழர்கள் நிலையும் ஒன்றா?. அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கையை தமிழீழத்துடன் ஒப்பிட்டு முதல்வர் பேசுவது தவறு.

தமிழ் ஈழத்தில் நடப்பதுபோல தமிழர்களின் உரிமைகள், உணர்வுகள் இங்கு நசுக்கப்பட்டால், தமிழ்நாட்டிலும் மீண்டும் அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை எழும். பிரபாகரன் உயிருடன் வாழ்கிறார். வர வேண்டிய நேரத்தில் அவர் தோன்றுவார். மீண்டும் ஈழப்போரை தலைமையேற்று நடத்துவார் என்றார்.

பழ.நெடுமாறன் பேசுகையில்,

விடுதலைப் புலிகள் சிங்கள ராணுவத்திடம் தோற்கவில்லை. 20 நாடுகள் உதவியுடன் நடத்திய போரை எதிர்த்து போராடியதால் விடுதலைப் புலிகள் பின்னடைவை சந்தித்துள்ளனர். ஆனால் எந்தவொரு நாடும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை.

தாயகத் தமிழர்களும், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களும், ராஜபக்சேவின் கொடுங்கோல் ஆட்சியின் முகமூடியை கிழித்தெறியும் வகையிலும், அனைத்து தரப்பு மக்களையும், உலக நாடுகளையும் திரட்டி, அடுத்த கட்ட போராட்டத்தை நடத்திட வேண்டும்.

இந்திய அரசின் முகமூடியை கிழித்தெரியும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்நூலை நாடு முழுவதும் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

இலங்கையில் மனிதம் கொல்லப்படுகிறது. வதை முகாமில் தினந்தோறும் 200 பேர் உயிரிழக்கின்றனர். இந்த கொடுமையை தடுத்து நிறுத்த இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி போராட வேண்டும். இதற்கான இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கக் கூட்டம் வரும் 19ம் தேதி நடக்கிறது.

இலங்கையில் தமிழ் ஈழம் மலர்வதற்கு வைகோ இடைவிடாமல் நடத்திய போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.

மகேந்திரன் பேசுகையில், தேசிய இன ஒடுக்குமுறை எங்கு நடந்தாலும் அதனை எதிர்த்து நடக்கும் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் ஆதரவு கொடுக்க வேண்டியது கடமையாகும்.

தமிழீழத்திற்கு உலக கம்யூனிஸ்டுகளின் ஆதரவை ஒன்று திரட்ட இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்து பாடுபடும். தமிழ் ஈழ தனி குடியரசு மலரும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றார்.

கவிஞர் இன்குலாப் பேசுகையில், ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் இந்திய அரசு துரோகம் செய்தது. அதற்கு தமிழக அரசு துணை போனது என்பதற்கு வரலாற்று ஆதாரமாக இந்த நூல் எதிர்காலத்தில் அமையும் என்றார்.

No comments:

Post a Comment