முன் பக்கம் கவிதைகள் கட்டுரை சினிமா புத்தகங்கள் சிறுகதைகள் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம் பங்குச் சந்தை
*கொழும்பு: தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

Friday, June 5, 2009

தமிழ் இனப் படுகொலையை இந்தியா ஊக்குவித்தது: பிரித்தானிய நாளிதழ் குற்றச்சாட்டு

தமிழ் இனப் படுகொலையை இந்தியா ஊக்குவித்தது இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாக பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் நாளிதழ் குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய தலைவர்கள் அடிக்கடி இலங்கை சென்று திரும்பியது போரை நிறுத்துவதற்காக அல்ல என்றும், தமிழ் மக்களை கொன்று குவித்த சிங்கள அரசைப் பாராட்டுவதற்காகத்தான் என்றும் 'மை ரெலிகிராப்' நாளிதழில் றிச்சர்ட் டிக்சன் எழுதிய கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
உலகின் தலைசிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவரும் மனித உரிமை ஆர்வலருமான றிச்சர்ட் டிக்சன் பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் 'மை ரெலிகிராப்' நாளிதழில் இலங்கை இனப்படுகொலை குறித்தும், அதனை தடுக்க உலக நாடுகள் தவறிவிட்டன குறித்தும் கட்டுரை எழுதினார்.
இனப்படுகொலைக்கு இந்தியாவும், உலக நாடுகளும் எப்படியெல்லாம் துணை போயின என்பது குறித்து அக்கட்டுரையில் அவர் விரிவாக விளக்கியுள்ளார்.


அவரின் கட்டுரையின் தமிழ் வடிவம்:
கடந்த 2004 ஆம் ஆண்டு ஆசிய ஆழிப்பேரலை இலங்கையைத் தாக்கியபோது, 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட சில நிமிடங்களில் அவர்கள் தங்களது மூச்சை நிறுத்திக் கொண்டனர். அவர்களின் கடைசி காலம் என்பது மிகவும் குறைந்த நேரமாகும்.
ஆழிப்பேரலையால் இலங்கையில் ஏற்பட்ட பாதிப்புக்களை உலகம் முழுவதும் உள்ள செய்தித் தொலைக்காட்சிகள் 24 மணி நேரமும் இடைவிடாமல் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. திரைப்பட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் இலங்கையில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி கேட்டு கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தனர்.

நாமும் நம்மால் முடிந்த உதவிகளை அனுப்பிக் கொண்டிருந்தோம். உலகின் பல்வேறு நாடுகளும் பல நூறு கோடி ரூபாய் நிதியுதவியை திரட்டி, தமிழ் மக்களை இன்னும் 2 ஆம் தர குடிமக்களாக நடத்திக் கொண்டிருக்கும் இலங்கைக்கு அனுப்பி வைத்தன.

ஆனால், அதே இலங்கையின் போர்க்களம் என்ற கொலைக் களத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் தாங்க முடியாத வலியுடன் மிக மெதுவாக இறந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த உலகம் அமைதி காத்துக்கொண்டிருக்கிறது.

ஆழிப்பேரலையைப் போன்றே இலங்கைத் தமிழர்களை அண்மையில் மற்றொரு பேரழிவு தாக்கியது. இப்பேரழிவு என்பது பல்வேறு மறைமுக நோக்கங்களுடன் நடத்தப்பட்ட போராகும். 50 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். மனித குல வரலாற்றில் மிக மோசமான போரில் இதுவும் ஒன்றாகும். கண்களில் இருந்து சிந்தும் கண்ணீரைப் போன்ற உருவம் கொண்ட இலங்கைத் தீவில் நடந்த போரில், ஆசிய ஆழிப்பேரலையில் இறந்ததை விட அதிகம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் உணவு, மருந்து இன்றி பல மாதங்கள் பதுங்குக்குழிகளுக்குள் பதுங்கிக் கிடந்தனர். சீனா, ரசியா உள்ளிட்ட நாடுகளின் வானூர்திகள் மருத்துவமனைகள் மீதும், பள்ளிகள் மீதும் வீசிய குண்டுகளில் அப்பாவித் தமிழர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
போரில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வந்தபோது மீண்டும் குண்டு வீசப்பட்டு கொல்லப்பட்டார்கள். காயமடைந்தவர்களுக்கு மருந்தும், உணவுப் பொருட்களும் திட்டமிட்டே மறுக்கப்பட்டன.

பெண்களும், குழந்தைகளும் அடுத்தடுத்து பல்வேறு துன்பங்களை சந்திக்க நேர்ந்தது. ஆனால் உலகின் சில வல்லரசு நாடுகள் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இந்த ஆழிப்பேரலைக்கு செய்தித் தொலைக்காட்சிகள் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை.

வழக்கமாக ஆசியாவில் வறுமை ஒழிப்புக் குறித்து பேசும் திரைப்படத்துறையினரும், விளையாட்டு வீரர்களும், அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க தங்களின் சுண்டு விரல்களைக் கூட அசைக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள ஊழலில் திளைத்த தலைவர்களும் தங்களது கடமையைச் செய்யத் தவறிவிட்டனர். நலிவடைந்த நிலையில் உள்ள மக்களை பாதுகாப்பதற்கு மாற்றாக சில தவறான மனிதர்களின் இசைக்கேற்ப அவர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர்.

மக்களை பாதுகாக்க வேண்டிய ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அனைத்துலக அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோரை பலிகொண்ட இந்த மர்ம விளையாட்டின் ஓர் அங்கமாகவே இருந்தனர்.
இலங்கை போரை தடுத்து நிறுத்தும் சக்தி பலருக்கு இருந்த போதிலும் அவர்கள் அதனை செய்யவில்லை. காரணம் அவர்களுக்கு விருப்பம் இல்லை.
இலங்கைப் போரின்போது சில நாடுகளின் தலைவர்களும், தூதுவர்களும் நடந்துகொண்ட விதத்தைப் பார்க்கும்போது, சில வேற்றுக்கிரக மனிதர்கள் எழுதிக் கொடுத்த அறிக்கைகளை இவர்கள் படிக்கிறார்களோ என்ற ஐயம் பலருக்கு ஏற்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் பேச வேண்டிய நேரங்களில் எல்லாம் பேசாமல் அமைதி காத்தார். அவரின் சிறப்புத் தூதுவர் விஜய் நம்பியார் போர் நிறுத்தம் பற்றி பேசுவதற்காக பலமுறை சிறிலங்கா சென்றார்.

ஆனால், அவரின் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. காரணம் அவர் உள்ளிட்ட பலரும் சில சொந்த விருப்பங்களைக் கொண்டிருந்ததுதான். பான் கி மூன், விஜய் நம்பியார் ஆகியோர் தங்களது கடமையில் இருந்து தவறியதுடன் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்த ஒரு நாட்டுக்கு முழு ஆதரவையும் அளித்தனர்.

இலங்கை போரை ஒருங்கிணைந்து நடத்திய சில இந்திய தலைவர்கள் கொழும்புக்கு அடிக்கடி பயணம் செய்தனர். அவர்களின் பயணத்தின் நோக்கம் போரை தடுத்து நிறுத்துவதல்ல அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுப்பது பற்றி பேசுவதல்ல மாறாக போரில் எந்த அளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்காணிப்பதும், போரை நடத்தும் சிறிலங்கா அதிகாரிகளை பாராட்டுவதற்காகவும்தான்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தலையை எடுப்பது பற்றியும் பிரபாகரன் கொல்லப்பட்டதற்கு ஆதரமான ஒரு சான்றிதழை பெறுவது பற்றியும்தான் அவர்கள் சிறிலங்கா ஆட்சியாளர்களுடன் பேசினர்.
ஆனால் பிரபாகரன் பற்றியோ அல்லது போர் பற்றியோ அல்லது இலங்கை கடலில் உள்ள எண்ணெய் வளங்களை கைப்பற்றியது குறித்தோ நாங்கள் பேசவில்லை என்று உலகை ஏமாற்றுவதற்காகத்தான் இந்திய தலைவர்கள் சிறிலங்கா சென்று பேசுவது போல நடித்தனர்.

இலங்கை போரில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக பாடுபட்ட ஒரே மனிதர் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபான்ட்தான். சிறிலங்கா அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களை அவர்தான் ஆதாரங்களுடன் மறுத்தார். அதற்காக வழக்கம் போலவே அவரும் வெள்ளைப் புலி என்று முத்திரைக் குத்தப்பட்டார்.

இலங்கைப் போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தி விட்டோம்.
எனினும் இலங்கையில் கம்பி வேலிக்குள் உள்ள முகாம்களில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படும், கற்பழிக்கப்படும், கொல்லப்படும் அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்ற இன்னும் காலம் கடந்துவிட வில்லை என்று ரிச்சர்ட் டிக்சன் கூறியுள்ளார்.
புதினம் இணையத்திற்கு நன்றி!

No comments:

Post a Comment